internet

img

ஸ்மார்ட் டிவி வாங்கும் முன் தெரிந்து கொள்ள வேண்டியவை

இணையப் பயன்பாடு கணினிகளுக்கானது என்ற நிலை மாறி நமது அன்றாடப் பயன்பாட்டில் உள்ள கைபேசி, சிசிடிவி, தொலைக்காட்சி மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள், வாகனங்கள் எனப் பல சாதனங்களிலும் பயன்படுத்தப்படும் வகையிலான தொழில்நுட்பமாக மாறியிருக்கிறது. தொலைக்காட்சி விற்பனை சந்தை சில ஆண்டுகளாக மந்தமாக இருந்த நிலை மாறி தற்போது ஸ்மார்ட் டிவிக்கள் வரு கையால் விற்பனை அதிகரித்திருப்பதாக தகவல்கள் தெரி விக்கின்றன. புதிதாக ஸ்மார்ட் டிவிக்கள் வாங்க விரும்புகிற வர்களுக்கு இப்போது தரப்போகும் ஆலோசனைகள் பயனுள்ள தாக இருக்கும் என்று நம்புகிறோம்.

சாதாரண டிவி - ஸ்மார்ட் டிவி இரண்டுக்கும் என்ன வித்தியாசம்
சாதாரண தொலைக்காட்சிப் பெட்டிகள் கேபிள் மற்றும் ஆடியோ வீடியோ இணைப்புகளை மட்டும் கொண்டிருக்கும் பழைய வகையாகவோ, HDMI இணைப்பு, USB இணைப்புகளை பயன்படுத்தக் கூடிய LCD, LED வகை திரைகள் கொண்ட தொலைக்காட்சிகளாகவோ இருக்கலாம். இவற்றில் இண்டர்நெட் இணைப்பை நேரடியாக பயன்படுத்த இயலாது.  ஸ்மார்ட் டிவிக்கள் மூலம் நேரடியாக இணையத்தை இணைக்கலாம். கூடுதலாக கணினிகளைப் போலவே இயங்குதளம் ஒன்றும் இவற்றிற்குத் தேவை. அந்த இயங்குதளம் அந்த டிவி தயாரிப்பு நிறுவனம் தயாரித்ததாகவோ அல்லது வேறு ஒரு நிறுவனம் தயாரித்ததாகவோ இருக்கலாம். ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை வடிவமைக்க கூடுதலாக முதலீடு செய்யவேண்டும். இதனால், சொந்தமாக ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை வைத்திருக்கக் கூடிய நிறுவனங்கள் குறைவு. அதனால்தான் ஸ்மார்ட் டிவியின் விலைக்கும் சாதாரண டிவியின் விலைக்கும் மிகப்பெரிய வித்தியாசமிருந்தது.  ஆண்ட்ராய்ட் மற்றும் லினெக்ஸ் இயங்குதளங்களைப் பயன்படுத்திக் கொண்டு பல நிறுவனங்களும் தங்கள் தொலைக்காட்சிகளைத் தயாரிக்கத் தொடங்கியிருப்பதால் தற்போது விலைகள் குறைந்துவிட்டன. தற்போது இணையக் கட்டணங்கள் குறைந்துவிட்டதால் வாங்குபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது.  இந்த வகையில் எண்ணற்ற நிறுவனங்கள் ஸ்மார்ட் டிவிக்களை சந்தையில் அறிமுகம் செய்துள்ளன. சுமார் 8000 ரூபாயிலிருந்து இவற்றின் விலைகள் தொடங்குகின்றன.  ஸ்மார்ட் டிவியின் வழியாக யூடியூப், நெட்ஃபிக்ஸ், ஹாட்ஸ்டார், அமேசான் ப்ரைம் வீடியோ மற்றும் பிரபலமான ஆப்ஸ்களை நீங்கள் அணுகலாம். இதுபோன்ற OTT வகை ஆப்ஸ் மற்றும் சந்தா செலுத்தி பார்க்கும் ஆப்ஸ்களில் உங்களுக்கு பிடித்த சேனல்களையும், திரைப்படங்களையும் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் ஸ்ட்ரீம் செய்து பார்க்கலாம். எந்தவொரு பிரச்சனையும் இல்லாத ஸ்ட்ரீமிங்கை அனுபவிக்க உங்களிடம் நல்ல வேகமுள்ள தடைபடாத இணைய இணைப்பு தேவை என்பது மட்டும் முக்கியமானது.

ஆண்ட்ராய்ட் டிவி
இதுவும் ஸ்மார்ட் டிவியில் ஒரு வகைதான், ஒரே ஒரு வித்தியாசம் என்னவெனில் இதில் ஆண்ட்ராய்ட் இயங்குதளம் (Android OS) கொண்டு இயங்கும். ஆண்ட்ராய்ட் மூலம் டிவி இயங்குவதன் நன்மை என்னவென்றால், கூகுள் பிளேஸ்டோர் ஆப்களை நேரடியாக இணையத்திலிருந்து பெறலாம். அத்துடன் கூகுள் அஸிஸ்டெண்ட்-ஐ பயன்படுத்தி சேனல்களை மாற்றுவது, வால்யூம் அளவை அதிகரித்தல் அல்லது குறைத்தல், ஆப்களை கட்டுப்படுத்துதல் போன்ற பல செயல்பாடுகளை நம்முடைய குரல் வழிக் கட்டளையாக (Voice command) கொடுத்து செயல்படுத்தலாம். மேலும், கூகுள் தரும் வானிலை தகவல்கள், பொது அறிவு கேள்விகள் போன்ற சேவைகளையும் பெறலாம். கைபேசிகளில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தை டிவியாக கையாளுவது எளிமையாக இருக்கும் என்பதால் பயனர்கள் இதனையே பெரிதும் விரும்பி வாங்குகின்றனர்.

சாதாரண டிவியை ஸ்மார்ட் டிவியாக மாற்ற முடியுமா?
மாற்ற முடியும். HDMI மற்றும் USB வசதியுள்ள உங்கள் தொலைக்காட்சியில் கூகுள் வழங்கும் குரோம்காஸ்ட் என்ற சாதனத்தை வாங்கி இணைத்து ஆண்ட்ராய்ட் டிவியாக மாற்றலாம். ரூ. 3499 என்ற விலையில் கிடைக்கிறது. அமேசான் ஃபயர் ஸ்டிக் என்ற சாதனமும் இணைய வழி ஸ்டீமிங் சேவையை வழங்குகிறது.  ஆண்ட்ராய்ட் டிவி பாக்ஸ் என்ற சாதனம் எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் கிடைக்கிறது. சில ஆன்லைன் ஸ்டோர்களிலும் கிடைக்கிறது. இதனைப் பயன்படுத்தியும் உங்கள் டிவியை ஸ்மார்ட் டிவியாக மாற்ற முடியும். இவற்றின் விலை சுமார் 3 ஆயிரம் ரூபாய் முதல் தொடங்குகிறது. ரேம், உள் நினைவகம் உள்ளிட்ட வசதிகளுக்கு ஏற்ப விலை மாறுபடும்.  ஏர்டெல் நிறுவனத்தின் டிடிஎச் சேவையில் இண்டர்நெட் வசதி கொண்டு செட்டாப் பாக்ஸ் ஒன்றும் தற்போது அறிமுகமாகியுள்ளது. குரோம்காஸ்ட் சேவையை இணைத்து வெளியாகியுள்ள இந்த செட்டாப் பாக்ஸ் விலை ரூ. 3,499 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் டிவிக்களும் பிரச்சனைக்குரியவையே..
ஸ்மார்ட் போன்கள், கணினிகளுக்கு அவ்வப்போது தலைவலியைத் தரும் வைரஸ் தாக்குதல், ஹேங் ஆவது, தகவல்கள் திருடு போதல் போன்ற பல பிரச்சனைகள் ஸ்மார்ட் டிவிக்களுக்கும் ஏற்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.